Pages

Sunday, March 10, 2024

இருவர் 🔥 ஏ.ஆர்.ரஹ்மானின் புதுப் பரிமாணம் ✨❤️

நேற்று வெகு நாட் கழித்து சூப்பர் சிங்கரில் பாடகர் மனோவின் 40 ஆண்டுக் கலைப்பயண சிறப்பு நிகழ்ச்சியைத் தேடிப் பார்த்தேன்.

அந்த நிகழ்வில் அற்புதமான பாடல்கள் பலதும் பகிரப்பட்டிருந்தாலும் இன்று காலை அனிச்சையாக ஒரு பாடல் மேல் மையல் கொண்டேன்.

அந்தப் பாடல் தான் “இருவர்” படத்தில் வந்த “ஆயிரத்தில் நான் ஒருவன்".

ஈராயிரக் குழவிகள் அடிக்கடி சொல்வது போல இந்த “இருவர்” படப் பாடல்களே ஒரு underrated தான்.

ஆங்காங்கே போட்டி மேடைகளில் “நறுமுகையே” பாடல் மட்டும் அடிக்கடி சாஸ்திரிய இசைச் சுற்றில் எட்டிப் பார்க்கும். காரணம் இந்தப் பாடலை விட மிகவும் சிக்கலான சாஸ்திரிய இசைப் பாடல்கள் கே.வி.மகாதேவன் காலத்தையதை எடுத்தால் மேல் மூச்சு, கீழ்மூச்சு, ஃபீமேல் மூச்சு வாங்கும் என்ற செளகரியச் சூழலும் (comfort zone) கூட இதை எடுக்க ஒரு காரணம். அங்கே தான் ஏ.ஆர்.ரஹ்மானின் தனித்துவத்தைக் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

“இருவர்” மாதிரியான ஒரு மெய் வாழ்வின் காலச் சூழலைப் பிரதிபலிக்கும் படத்துக்கு (period film) அப்படியே பழைய நொடி அடிக்கக் கூடிய பாடல்களைத் தானே பொதுவாக மீளுருவாக்கம் செய்ய முனைவார்கள்?

ஆனால் இங்கே ரஹ்மான் பரீட்சித்துப் பார்த்தது

புதுக் குரல்கள் 

தன்னுடைய தனித்துவமான இசை 

ஆனால் அந்தக் காலத்தைப் பிரதிபலிக்கக் கூடிய உள்ளுணர்வை ரசிகனுக்கு எழுப்ப வேண்டும்.

“கண்ணைக் கட்டிக் கொள்ளாதே

 கண்டதை எல்லாம் நம்பாதே”

ஹரிஹரன் பாடுகிறார். அப்படியே “கண்ணை நம்பாதே” (நினைத்ததை முடிப்பவன்) காலத்தில் இருத்தி விடும்.

என் வானொலிக் காலத்தின் ஆரம்ப அரசியல் கலந்துரையாடல் நிகழ்வுகளின் முகப்புப் பாடலாக இந்த “கண்ணைக் கட்டிக் கொள்ளாதே” பல்லாண்டுகள் ஆட்சி செய்தது.

கேட்கும் போதே அந்தக் கட்சித் தொண்டனை உசுப்பி உள்ளிழுக்கும் தலைவனின் குரலாய் ஓங்கி ஒலிக்கும்.

இதெல்லாம் பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எம்.ஜி.ஆருக்குக் கொடுத்த எழுச்சிப் பாட்டுகளையும் நினைப்பூட்டும்.

அது போலத்தான் TMS  தன் குரலில் ஒரு நெளிவைக் காட்டிக் குழைந்து கொடுக்கும் தொனியை “ஆயிரத்தில் நான் ஒருவன்” பாடலின் வழியே மனோ பிறப்பிப்பார். மனோவைப் பொறுத்தவரை அவரை வித்தியாசப்படுத்திய பாடல்களில் இதுவும் மிக முக்கியமாக மேடையில் கொண்டாடப்பட வேண்டியதொன்று.




பி.சுசீலாம்மாவுக்குப் பதிலாக அவரின் மருமகள் சந்தியாவை அழைத்து வந்து 

“பூ கொடியின் புன்னகை” அந்த பி.சுசீலாம்மாவின் ஏகாந்தம் மிதக்கும் பாடலில். இன்னொன்று “வெண்ணிலா வெண்ணிலா” (ஆஷா போஸ்லே) கூட அதே தொனிதான்.

“நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்லாய்”

அந்த உன்னிகிருஷ்ணன், பாம்பே ஜெயஶ்ரீ மென்குரல்கள் “எம்.ஜி.ஆருக்கு அரிதாகப் பாடிய ஏ.எம்.ராஜா பாட்டுகளை நினைப்பூட்டும். அந்தப் பாடலில் கையாண்ட வரிகளும் தமிழ்த் திரையிசையின் ஆரம்ப காலத்துத் சங்கத் தமிழைக் காட்டி நிற்கும்.

எல்.ஆர்.ஈஸ்வரி & சதன் கூட்டணியின் அந்த க்ளப் நடன ரேஞ்சில் இங்கே ஹரிணி & ராஜகோபால் “ஹல்லோ மிஸ்டர் எதிர்க்கட்சி” என்று கும்மாளம் போடுவார்கள்.

இருவர் படம் வந்தபோது அந்தப் படத்தை மெல்பர்னில் பார்த்தபோது பக்கத்தில் இருந்தவர் தன் மனைவிக்கு எம்.ஜி.ஆர் & கருணாநிதி காலத்தை நினைவுபடுத்தித் தொடர்புபடுத்திப் பேசிக் கொண்டிருந்தார் 😀 அவ்வளவுக்கு ஒரு குறிப்பிட்ட ரசிக வட்டத்துக்கு அப்போது பிடித்துப் போன படமிது.

“இந்தப் படத்தில், கதாபாத்திரங்களுக்காக எந்தப் பாடலையும் உருவாக்கவில்லை. உண்மையில் “இருவர்” படத்துக்கு என்று எந்தப் பாடலையும் உருவாக்கவில்லை. இந்தப் படத்தினுள் வரும் படங்களில் வரும் பாடல்களைத்தான் நாம் பார்த்தோம்.”

இப்படி மணிரத்னம் தன்னுடைய மணிரத்னம் படைப்புகள் ஓர் உரையாடல் (பரத்வாஜ் ரங்கன்) நூலில் குறிப்பிட்டிருக்கிறது.

இங்கே தான் ஏ.ஆர்.ரஹ்மானின் உழைப்பும், அவரின் வித்தியாச நோக்கையும் மெச்ச வேண்டும். 

இருவரில் பழையதைப் புதுமையாக்கிப் பழையது போல் காட்டியதில் வெற்றி பெற்றிருக்கிறார்.

பின்னாளில் தமிழில் அவருக்கு அப்படியொரு சூழல் வாய்க்கவில்லை அல்லது அவர் அந்த மாதிரியான சூழலை இதுபோல் கையாளவில்லை என்பேன்.

"இருவர்" பாடல்களைக் கேட்க

https://www.youtube.com/watch?v=Z0OIkvlrjuU

கானா பிரபா

படங்கள் நன்றி IMDB