Pages

Tuesday, May 24, 2011

திரையிசையில் இணைகள்

கொஞ்ச நாளாகப் புதுப்பாடல் ஒன்று அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. தலைமுதல் கால்வரை ராஜா ரத்தம் ஓடும் ஒருவனுக்கு புதுப்பாடல் ஒன்றை அவ்வளவு சீக்கிரம் ஏற்றுக்கொள்ள ஒவ்வாது எனக்கு. ஆனால் இப்படி அரிதாக ஒன்றோ இரண்டோ ஆட்கொண்டால் ஆசைதீரக் கேட்டுவிட்டுத் தான் மறுவேலை. அப்படியாக வந்து வாய்த்தது தான் தெய்வத்திருமகன் திரைப்படத்தில் இருந்து "விழிகளில் ஒரு வானவில்" என்ற பாடல். நா.முத்துக்குமாரின் கவிவரிகளில் பாடகி சைந்தவி பாடியிருக்கும் அருமையானது மென்சந்தம் அது. ஆர்ப்பாட்டமில்லாத இசை மெல்ல மெல்லப் பியானோவின் ஒற்றைச் சிறகுகளை வலித்துக் கொண்டே வரும் போதே மனசில் ஆக்கிரமிப்பை மெல்ல மெல்லக் கொண்டு வருகின்றது. பாடலை உன்னிப்பாகக் கேட்டால் சைந்தவியின் குரலைத் தான் முதலீடாகக் கொண்டு மற்ற எல்லாம் உபரியாகத் தான் பயணிக்கின்றன நா.முத்துக்குமாரின் வரிகளும் கூட. இந்தப் பாடலின் வரிகளை விட வலியதொரு படைப்பை முத்துக்குமார் கொடுக்கமுடியும் என்றாலும் இதுவே போதும் என்று நினைக்கத் தோன்றும் அப்போது தானே பாடகியின் குரலைச் சலனமில்லாமல் ரசிக்கமுடியுமே.
ஜி.வி.பிரகாஷ்குமார், சிக்குபுக்கு ரயில் விட்ட காலத்தில் இருந்து பார்த்து வளர்ந்த பையன், அவரின் அடுக்கடுக்கான வளர்ச்சி விகாரமில்லாமல் பரிணாமம் கொண்டு வருவதை எட்ட இருந்து ரசிக்கிறேன். கிரீடம் படத்தில் "விழியில் உன் விழியில்", மதராசப்பட்டணம் படத்தில் "பூக்கள் பூக்கும் தருணம்" என்று இந்தச் சின்ன மூர்த்தி சிறிது காரம் பெரிது.

"விழிகளில் ஒரு வானவில்" பாடலில் சைந்தவிக்கு மாற்றீடை ஷ்ரேயா கொசல் இல் இருந்து எல்லாப் புதுப்பாடகிகள் வரை பொருத்திப் பார்த்தும் சைந்தவி தான் கச்சிதமாக அமைகின்றார். மெல்லிய கிசுகிசுக்குரலில் காதுக்குள் உட்காரும் காதலியின் குரலாக வந்து விழும் சைந்தவி ஜி.வி.பிரகாஷ்குமாரின் விழிகளில் விழுந்து விட்ட நிரந்தர வானவில், இந்தப் பந்தம் திருமணத்தில் இணையவிருக்கின்றது என்பதும் பாடலை இன்னும் நெருக்கமாக இருத்திக் கேட்க முடிகின்றதோ என்னமோ


முதற்பாடலின் ஆக்கிரமிப்பில், திரையிசையில் ஜோடி சேர்ந்த நிஜத்திலும் கரம்பிடித்த இசை ஜோடிகளை மனதில் சுழலவிட்டேன். ஒரு பட்டியல் வந்தது.
ஏ.எம்.ராஜா என்ற பாடகரோடு மட்டும் ஜோடிக்குரலாக நின்றுவிடாமல் வாழ்க்கைத்துணையாகவும் வந்து வாய்த்த பிரபல பின்னணிப்பாடகி ஜிக்கி, ஏ.எம்.ராஜா இசையமைப்பாளராக வந்தபோதும் அவர் இசையில் பாடும் வரத்தைப் பெற்றிருக்கின்றார். அந்தப் பாடல்களை ஒரு பட்டியல் போடலாம். அப்படியொரு இனிமையான புகழ்பெற்ற பாட்டு கல்யாணப்பரிசு படத்தில் வரும் "துள்ளாத மனமும் துள்ளும்"



வி.குமார், மெல்லிசை மன்னர் காலத்தில் வந்த குறுநில மன்னர். இவரின் இசையமைப்பில் வந்த பாடல்கள் சொற்பம் என்றாலும் எல்லாமே கேட்கக் கேட்கச் சொர்க்கம். அப்படியொரு பாடல் தான் "இனங்களிலே என்ன இனம் பெண்ணினம்". வானொலி நிகழ்ச்சி செய்யும் போது நான் அதீத குஷியாக இருக்கிறேன் என்னும் சமயங்களில் வரும் பாடல்களில் இந்தப் பாடலும் ஒன்றாக இருக்கும். "நல்ல பெண்மணி" படத்தில் வரும் இந்தப் பாடலை கே.ஜே.ஜேசுதாசோடு இணைந்து பாடியிருப்பவர் வி.குமாரின் நிஜ வாழ்வின் ஜோடி பாடகி ஸ்வர்ணா. பாடகி ஸ்வர்ணா, ஜேசுதாஸ் தவிர எஸ்.பி.பாலசுப்ரமணியம் போன்ற பாடகர்களோடும் பாடியிருக்கின்றார். விசேஷமாகத் தன் கணவர் வி.குமாரின் இசையில் பல பாடல்களைப் பாடியிருக்கின்றார்.



இளையராஜாவின் சாயலைக் கொஞ்சம் கலந்து கொஞ்சமே இசையமைத்த இசையமைப்பாளர் பரணியின் படங்களில் "பார்வை ஒன்றே போதுமே" அவர் மீது ரசிகர்களின் பார்வையைப் படவைத்த படம். இந்தப் படம் கொடுத்த பெரும் புகழை வேறு எந்தப் படமும் அவருக்குக் கொடுக்கவில்லை. இத்தோடு செட்டில் ஆகிவிடலாம் என்றோ என்னவோ இதே படத்தில் பாடிய பாடகி சுமித்ராவை வாழ்க்கைத் துணையாக்கிக் கொண்டுவிட்டார். இதோ அதிகம் அறியப்படாத அந்தப் பாடகி சுமித்ரா பாட்டை ஆரம்பிக்கத் தொடர்கிறார் கிருஷ்ணராஜ், பார்வை ஒன்றே போதுமே படத்திற்காக " நீ பார்த்துட்டுப் போனாலும்"



மேலே சொன்ன ஜோடிகளைத் தவிர, ஏ.ஆர்.ரஹ்மானின் கோரஸ் பாடகிகளில் ஒருவராக வலம்வந்த பெஃபிமணி இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவாவைக் கரம்பிடித்திருக்கின்றார்.

இதுவரை இசையமைப்பாளரின் இணைகள் பாடகிகளாக இனம் காணப்பட்ட பாடல்களைக் கொடுத்தேன். சற்று வித்யாசமாகத் தமிழ்திரையில் இரண்டு இசையமைப்பு ஜோடி வாழ்க்கையிலும் ஜோடி கட்டிய வகையில் ஃபைவ் ஸ்டார் படத்தில் இசையை வழங்கிய அனுராதா ஶ்ரீராம் அவரின் கணவர் பரசுராமோடு இணைந்து பரசுராம் ராதா என்று இசைமைத்திருந்தார்கள். அவர்களுக்கு முன்னமே இன்னொரு ஜோடி இருந்திருக்கின்றது அவர்கள் லதா - கண்ணன் என்று "60 நாள் 60 நிமிடம் எ" திரைப்படத்துக்கு இசையமைத்திருக்கின்றார்கள். அந்தப் படத்தின் பாடல்கள் அதிகம் பிரபலமாகவில்லை. இதோ அந்தப் பாடல்களைக் கேட்கும் தொடுப்பு

7 comments:

எம்.ரிஷான் ஷெரீப் said...

நல்ல பதிவு. பரணியின் அதற்குப் பின்னரான படங்களும் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தன. ஜானகி, சித்ரா, சுவர்ணலதா போன்ற பிரபலங்களுக்கு தன் படங்களில் தவறாது வாய்ப்புக் கொடுத்தவர். இந் நாட்களில் என்ன செய்கிறார்?

பாடக ஜோடிகளைக் குறித்தும் ஒரு பதிவிடுங்கள். திப்பு, ஹரிணி, ஸ்ரீலேகா பார்த்தசாரதி என்று நிறையப் பேர் இருக்கிறார்கள்.

Kaarthik said...

இது இசையமைப்பாளர்-பாடகி ஜோடி மட்டும்தானா? திப்பு ஹரிணி ஜோடியை விட்டுட்டீங்க? ஹிந்தியில் ஆர்.டி.பர்மன்- ஆஷா போனஸ்லே ஒரு கலக்கல் ஜோடி!

அனுராதா மற்றும் ஸ்ரீராம் போல், நஞ்சுபுரம் இசையமைப்பாளர் (நடிகர்) ராகவின் மனைவி ப்ரீதா அந்தப் படத்தில் பாடியுள்ளார். விஜய் ஆண்டனி சன் டிவி தொகுப்பாளினி ஃபாத்திமா ஹனிடியூ வை மணந்தார். அவரது இசையில் ஃபாத்திமா ஒரு பாடல் பாடியுள்ளார் என நினைக்கிறேன்.

கானா பிரபா said...

வணக்கம் ரிஷான்

பரணியின் பாடல்கள் கேட்கும் தரத்தில் இருந்தாலும் பார்வை ஒன்றே போதுமே அளவுக்குப் புகழ்பெறவில்லை. இப்போது ஒரு படம் செய்கிறார். பாடக ஜோடி வரும்

கானா பிரபா said...

கார்த்திக்

இது இசையமைப்பாளர் பாடகி ஜோடி மட்டும் தான். இதில் விடுபட்டவர்களில் தமன் - ஶ்ரீவர்த்தனி மற்றும் ஹிந்தி இசையமைப்பாளர் விஷால் பரத்வாஜ் மனைவி

கோபிநாத் said...

\\தலைமுதல் கால்வரை ராஜா ரத்தம் ஓடும் ஒருவனுக்கு புதுப்பாடல் ஒன்றை அவ்வளவு சீக்கிரம் ஏற்றுக்கொள்ள ஒவ்வாது எனக்கு\\

அப்படியே ஒரு வரிக்கு வரி வழிமொக்கிறேன் ;)

Mahan.Thamesh said...

SUPER POST

pirapa said...

நா.முத்துக்குமாரின் கவிவரிகளை
நானும் ரசிப்பவன்
நல்ல பதிவு.
தொடரட்டும் உங்கள் சேவை.வாழ்த்துக்கள்